திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று துவங்கியது. முதல்நாளில் முக்கிய கட்சிகள் எதுவும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால், திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்தால், காலியாகவுள்ள மேற்கு தொகுதிக்கு வரும் அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. திருச்சி மேற்கு தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு துவங்கி, மாலை 3 மணிக்கு முடிந்தது. தொடர்ந்து 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. 27ம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனையும், 28, 29ம் தேதி காலை 11 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 29ம் தேதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்களுக்குரிய சின்னங்கள ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முதன்முதலாக இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க., சார்பில் பரஞ்ஜோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது அவரது இரண்டாவது மனைவி டாக்டர் ராணி புகார் பட்டியல் வாசித்துள்ளதால், பரஞ்ஜோதிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், அவர் நாளை (செப்., 21) வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடுமா? அல்லது புறக்கணித்து விடுமா என்ற சந்தேகத்தை நேற்று முன்தினம் இரவு, கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தீர்த்து வைத்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் 19, 20 ஆகிய தேதிகளில் விருப்பமனு தாக்கல் செய்யலாம்' என்று கூறியுள்ளது. ஆகையால், இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளன. இதனால், அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் மட்டும் களத்தில் உள்ளன. பாரதிய ஜனதாக்கட்சியும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் துவங்கியது. முதல்நாளான நேற்று முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. "கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெறுவதுக்காக, சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் மற்றும் மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகிய இருவர் மட்டும் முதல்நாள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பார்வையாளர் திருச்சி வருகை: ஆந்திரா மாநிலம் ஹைதராபாத் வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் நிவேதிதா பிஸ்வாஸ், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தார். அவர் இன்று தான் திருச்சி வருவதாக இருந்தது. ஆனால், ஒரு நாள் முன்னதாக வந்துள்ள அவர், திருச்சி மாநரகாட்சி பயணியர் மாளிகையில் தங்கியுள்ளார்.
No comments:
Post a Comment