Thursday 15 December 2011

உடும்பன்சோலையில் அச்சத்தில் தமிழர்கள்

கேரள மாநிலம் உடும்பன்சோலையில் தமிழர்கள், உடனடியாக வெளியேறி தமிழகத்திற்கு செல்ல வேண்டும், என அங்குள்ள கேரளத்தவர்கள் கெடு விதித்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தேனி மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பால், அரிசி, இறைச்சி என எவ்வித பொருட்களும் கொண்டு செல்லப்படவில்லை. மேலும் கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் கேரளாவில் தமிழர்கள் மற்றும் தமிழர்களின் சொத்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. சேத்துக்குழி, சாஸ்தான்ஓடை, மங்கலம், பாரத்தோடு என பல இடங்களில் தமிழர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் உடும்பன்சோலையில், தமிழர்கள் மற்றும் கேரளத்தவர்கள் சரிபாதியாக உள்ளனர். நேற்று முன்தினம் இரவு உடும்பன்சோலை மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, உடும்பன்சோலையில் தமிழர்கள் இருக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர். மேலும், 24 மணி நேரத்திற்குள் கேரளாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர்.அங்கு வசிக்கும் தமிழர்கள் சார்பில் கேரள அரசின் தலைமை செயலாளருக்கு தகவல் தரப்பட்டுள்ளது. அதன்பேரில் கேரள அரசின் சிறப்பு போலீஸ் படை உடும்பன்சோலை, பாரத்தோடு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் எப்போது வேண்டுமானாலும் மோதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் தமிழர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment