சதுரகிரி மகாலிங்கம் – காரையார் சொரிமுத்து அய்யனார்
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சதுரகிரி - நான்கு மலைகள் எனப் பொருள் படும். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, மற்றும் பேரையூர் வட்டம் இடையே, மலைகள் சூழ்ந்த பகுதியாகும்.அப்பகுதியில் தான் சதுரகிரி அமைந்துள்ளது. சித்தர்கள் வசிக்கும் பகுதியாக, சிந்தையிலே சிவனை வைத்தவர்களுக்கு பூலோக கயிலாயமாக, இயற்கை அன்னையின் அருள் மிகுந்த பகுதியாக,எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேஸ்வரன் அங்கிருந்து அருளும் இடமாக சதுரகிரி அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.
சிவஸ்தலமான சதுரகிரி மலை கோயிலில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை விழா தொடங்கியது முதலே சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், சங்கொலி பூஜைகள் நடைபெற்றன. ஆடி ஆமாவாசை விழாவையொட்டி, கடந்த ஒருவாரமாகவே பக்தர்கள் மலைக்கு வந்தவண்ணம் இருந்தனர். வியாழக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மலையடிவாரமான தாணிப்பாறை, மந்தித்தோப்பு, மாவூத்து மற்றும் அதன் சுற்றுப்பகுதி வயல்வெளிகள், தோப்புகளில் கூடாரம் அமைத்து, பக்தர்கள் தங்கியுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்து வருகின்றனர்.
காரையார் – சொரிமுத்து அய்யனார்
நெல்லை மாவட்டம் காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலின் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பண்டைய காலத்தில் கைலாய மலையில் சிவன்-பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமன்படுத்த அகஸ்தியர் பொதிகை மலை சென்றார். அப்போது தற்போது கோயில் இருக்கும் பகுதியில் அகஸ்தியர் லிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டது.
பிற்காலத்தில் வாணிபம் விஷயமாக மாட்டு வண்டிகள் அவ்வழியாக சென்றபோது ஒரு கல்லில் மாட்டு குழம்புகள் பட்டு ரத்தம் கசிந்தது என்றும், இவ்வழியாக சென்ற பசு மாடுகள் ஓரிடத்தில் மட்டும் பால் சொரிந்தன என்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்தில் தோண்டி பார்த்தபோது அங்கு ஒரு லிங்கம் இருந்ததை கண்டு பரவசமடைந்தனர்.
பின்னர் அங்கு கோயில் எழுப்பி சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் என்பதால் காலப்போக்கில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்க துவங்கியது. மேலும் பந்தல மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சுவாமி அய்யப்பன் தனது சிறுவயதில் தற்போது கோயில் இருக்கும் இடத்திற்கு வந்து வீர விளையாட்டுக்களை கற்க வந்தார் என்றும் ஸ்தல புராணங்கள் தெரிவிக்கின்றன.
பத்துநாள் திருவிழா
இக்கோயிலில் மகாலிங்கம், சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்மராட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகஸ்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், கரடிமாடசாமி ஆகிய சுவாமிகள் குடி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதனையொட்டி கடந்த 21ம் தேதி கோயிலில் கால்நாட்டு வைபவம் நடந்தது.
பத்து நாட்களும் தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் ஆடி அமாவாசை தினத்தன்று சுவாமி தரிசனம் செய்யவும், பொங்கலிடவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
No comments:
Post a Comment