கேரள ஏலத்தோட்டங்களில் சிக்கியுள்ள, தமிழக தொழிலாளர்களை மீட்கப்போவதாக, தேவாரம் சாக்குலூத்து, கோம்பை ராமக்கல்மெட்டு வனப்பதை வழியாக, கேரளா செல்ல முயன்றவர்களை, போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இடுக்கி மாவட்ட ஏலத்தோட்டங்களில் பல ஆயிரம் தமிழக தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கேரள வன்முறை கும்பலிடம் சிக்கி சிரமப்படுகின்றனர். கேரளாவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போவதாக கூறி தேனி மாவட்டம் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், டி.மீனாட்சிபுரம், மேட்டுப்பட்டியிலிருந்து ஏராளமானோர் திரண்டனர். கேரளா முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு கேரளா எல்லையை நோக்கி சென்றனர். தேவாரத்திலிருந்து புறப்பட்டவர்கள் சாக்குலூத்து மெட்டு வழியாகவும், கோம்பையிலிருந்து சென்றவர்கள் ராமக்கல் மெட்டு வழியாகவும் கேரளாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அத்துமீறி கேரள எல்லைக்குள் செல்பவர்களை கண்டதும் சுட இடுக்கி எஸ்.பி., ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.போராட்டக்காரர்கள் கேரள பகுதிக்குள் நுழைந்தால் நிலமை விபரீதமாகும் என்பதால், திண்டுக்கல் டி.ஐ.ஜி., சந்தீப் மாத்தூர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். சாக்குலூத்து மெட்டு பாதையில் நுழைய முயற்சித்தவர்களை சக்கணகுண்டு அருகிலும், ராமக்கல்மெட்டுக்கு சென்றவர்களை பெருமாள் மலைக்கோயில் அருகிலும் தடுத்தனர். தடையை மீறி சிலர் காட்டுப்பாதை வழியாக செல்ல முயன்றனர். கேரளாவில் பாதிக்கப்படும் தமிழர்கள் எளிதில் ஊருக்கு திரும்ப இந்த பாதைகள் பயன்படுகின்றன. இந்த பாதைகளை முற்றுகையிட்டால், தமிழக தொழிலாளர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்படுமென்று போலீசார் சமரசம் செய்தனர். போலீசாரின் சமரசத்தால் போராட்டக்காரர்கள் ஊர்களுக்கு திரும்பினர்.
No comments:
Post a Comment