Thursday, 15 December 2011

கேரளாவில் வன்முறைக்கும்பலின் வெறியாட்டம்

கேரளாவில் வன்முறைக்கும்பலின் வெறியாட்டம் உச்சகட்டம் அடைந்துள்ளதால், உடும்பன்சோலை தாலுகாவிலிருந்து 5 ஆயிரம் தமிழக குடும்பங்கள் வெளியேறி உள்ளனர். மூடை, முடிச்சுகளுடன் வெளியேறுபவர்களையும், தமிழக எல்லையில் வன்முறையாளர்கள் அடித்து உதைப்பதால், எஸ்டேட்களில் தங்கி இரவில் வனப்பாதை வழியாக வருகின்றனர். முல்லை பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை, 120 அடியாக குறைக்க, கேரளா அரசு தாக்கல் செய்த மனுவை, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த விபரம் பரவியதால் இடுக்கி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழக முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு, தமிழர்களின் சொத்துகள் மீதான தாக்குதல், ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன. உடும்பன்சோலை தாலுகாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் உள்ளன. மூன்று தலைமுறைகளாக தங்கியுள்ள இவர்களுக்கு தமிழகத்தில் வீடில்லை. இவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு இரவில் கேரள வன்முறை கும்பல் சென்று வீடுகளை அடித்து நொறுக்கி, தீ வைக்கின்றனர். தமிழர்களுக்கு சொந்தமான ஏலத்தோட்டங்களில் ஏலக்காய் பதப்படுத்தும் ஸ்டோர்கள், நீர் தெளிப்பு கருவிகள், ஜெனரேட்டர்கள், குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. சதுரங்கப்பாறை மெட்டில் உள்ள தனியார் மின் காற்றாலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து, தமிழகத்திற்கு வரும் மின் வயர்களை சேதப்படுத்தியுள்ளனர். உடும்பன்சோலை பகுதியில் தங்கியுள்ள தமிழர்கள், ஒருநாள் அவகாசத்தில் வெளியேற கேரளா வன்முறை கும்பல் எச்சரித்துள்ளது.கேராவிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் கூறியதாவது;ஈஸ்வரன், 33: "உடும்பன்சோலையில் தங்கியுள்ளவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு நெடுங்கண்டம் செல்ல வேண்டும். தமிழர்களுக்கு சிகிச்சையளிக்க மறுக்கின்றனர். இங்கு, பல தலைமுறையாக வசிக்கும் தமிழர்களுக்கு சொந்தமாக ஓட்டல்கள், மளிகைக்கடைகள், வாடகை வாகனங்கள் உள்ளன. கடைகளை திறக்கவும், வாகனங்களை இயக்கவும் தடை விதித்துள்ளனர்.மகேஸ்வரி, 25:எங்கள் மூதாதையர் போடி அருகேயுள்ள புதூரை சேர்ந்தவர்கள். ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை கேரளாவில் உள்ளது. இரண்டு மாத கைக்குழந்தையுடன் காட்டுப்பாதையில் நடந்து வருகிறோம். எங்கு போய் தங்குவதென்று தெரியவில்லை.முருகன், 27: தமிழர்கள் தங்கியுள்ள பகுதியில் டிப்பர் லாரிகளில் கற்களை கொண்டு வந்து குவிக்கின்றனர். இரவிற்குள் கேரளாவை விட்டு வெளியேறா விட்டால் வீட்டிற்குள் சமாதி கட்டி விடுவோம் என்று மிரட்டுகின்றனர். கேரளா போலீசார் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.தேனி கலெக்டர் பழனிச்சாமி கூறுகையில், ""கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, தமிழகத்தில் வீடில்லாதவர்களை சிறப்பு முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். கேரளாவிலுள்ளவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment